தேவனின் நாமத்தை தரித்துக் கொள்வது எப்படி?
                        நம் தேவன் ஒருவரே (God ஏலோகிம்); ஒரே தேவன் மூன்று ஆள்தத்து வமாயிருக் கிறார் (1யோ 5:7;1தீமோ2:5; எபே4:5,6). தேவன் ஒருவர் என்பதால் அவருக்கு தனிப்பட்ட பெயர் இல்லை என்றும், தேவை யில்லை என்றும், ஏற்கெனவே பழைய முழக்கங்களிலும், ஆராய்ச்சிப் புத்தகங் களிலும் எழுதியிருக்கிறேன். ஆனால், மூன்று ஆள்தத்துவமான ஒரே தேவனுக்கு, பல காரணப் பெயர்கள் உள்ளன. யோகோவா, கர்த்தர், பிதா, எல்ஷடாய், இமானுவேல், இயேசு, வார்த்தை, அதிசயம், பரிசுத்த ஆவியானவர் போன்ற பல பெயர்கள் வேதத்தில் காணப்படுகின்றன. இந்த நாமங்களில் ஏதாவது ஒன்றை விசுவாசி களாகிய நாம் தரித்துக் கொள்ள வேண்டுமா? அல்லது நாமம் என்றால் வேறு ஏதாவது அர்த்தம் உண்டா? இந்த கருகலான சத்தியத்தை ஆவியானவர் தாமே வெளிப்படுத்துவாராக!
                        நியாயப் பிரமாணத்தில் ஆசீர்வாதத் தையும் சாபத்தையும் பற்றி தேவன் சொல்லும்போது, ஆசீர்வாதம் இஸ்ரேல ருக்கு வரும் போது, "".... கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்''. (உபா 28:10) என்று எழுதப் பட்டுள்ளது. அப்படியானால், ஆசீர்வாதத்தைப் பெறும் அத்தனை இஸ்ரேலருக்கும் கர்த்தருடைய நாமம் - பெயர்தான் வைக்கப் பட்டிருக்குமா? அப்போதிருந்த மோசே ஆரோன், மீரியாம், யோசுவா போன் றோருக்குள்ள பெயரெல் லாம் தேவனின் நாமமா? இல்லையே! ஆகையால், நாமம் தரிக்கப்பட்டது என்றால் பெயர் தரிக்கப்படுவது என்று அர்த்தம் இல்லை அல்லவா!
                        தாவீது கோலியாத்துக்கு முன்னே சொன்ன வார்த்தைகளைப் பாருங்கள் :- ""........ நானோ, நீநிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனை களுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத் தில் வருகிறேன்'' (1சாமு17:45) அப்படி யானால், தாவீதின் நாமம் தான் கர்த்தருடைய நாமமா? இல்லையே! தாவீது கர்த்தருடைய நாமத்தில் - பெயரில் வரவில்லை என்றால், அவன், கர்த்தரின் நாமத்திலே வருகிறேன் என்று சொன்னதன் அர்த்தம் என்ன?
சாலமோனிடத்திலே கர்த்தர் தரிசனமாகி சொன்னவார்த்தையைக் கேளுங்கள் :-""என் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி....'' (2 நாளா 7:14) இஸ்ரேல் தேசமக்கள் எல்லாரும் கர்த்தரின் நாமத் தை - பெயரைத் தரித்திருக்கிறார் களா? இல்லையே! அப்படியானால் ""என் நாமம் தரித்த ஜனங்கள்'' என்றால் அர்த்த மென்ன?
                        கடைசி காலத்தில் நடக்கும் ஒரு காரியத்தை இயேசு கிறிஸ்து சொல்வதைக் கேளுங்கள் : ""ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக் கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப் பார்கள்''. (மத் 24:5; மாற் 13:6; லூக் 21:8) அப்படியானால், கடைசிகாலத்தில் எழும்புகிற கள்ளக் கிறிஸ்துகளும், கள்ள தீர்க்கதரிசி களும், கள்ளப்போதகர்களும் இயேசு என்ற பெயரை - நாமத்தை தரித்துக் கொண்டா வரு வார்கள்? இல்லையே! பாலாசீர்லாறி, பிரன் ஹாம், எலன் ஜி ஒயிட், போன்றோ ரெல்லாம் இயேசுவின் பெயரைத் தரிப்பிக்க வில்லையே! அப்படியானால் ""என் நாமம் தரித்துக் கொண்டு'' என்பதன் அர்த்த மென்ன?
                        யோ5:43ல், ""நான் என்பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று இயேசு சொல்கிறாரே, பிதாவின் நாமம் - பெயர் - இயேசுவா? இல்லையே? 2010 ஆண்டு களுக்கு முன்னாலே கன்னிமரியாளிடம் வார்த்தையாகிய தேவன் பிறந்தபோது, அவருக்கு தேவதூதன் மூலமாக, தேவன் வைக்கச் சொன்ன பெயர்தானே இயேசு என்பது. அதற்கு முன்னாலே இயேசு என்ற பெயர் யாருக்கும் வெளிப்படுத்தப்பட வில்லையே! அப்படியானால் ""நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும்'' என்பதன் அர்த்தமென்ன?
                        வெளி14:1ல் வரும் 1,44,000 பேரின் நெற்றிகளில் பிதாவின் நாமம் எழுதப்பட்டி ருந்ததாமே! பிதாவின் நாமம் என்றால் பெயரா? இல்லையே! ""பிதாவின் நாமம் தான் என்ன? அதை அறிவாயோ?'' என்று சாலமேன் ஞானி, நீதி30:4ல் கேட்பது புரியவில்லையா?
                        இதை வாசிக்கும் தேவபிள்ளையே! இப்படியாய் ஏராளமான காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இவை களிலிருந்து நாமறிவது என்ன? ""நாமம்'' என்றால் பெயர் என்று மட்டும் அர்த்தமல்ல, பெயர் ஒருவருக்குத்தான் வைக்கப்படும், அழைக்கப்படும். எல்லோருக்கும் தேவனின் காரணப்பெயர்களை மாத்திரமே வைக்க முடியாது; அழைக்கவும் முடியாது; அப்படி அழைக்கவும் தேவகட்டளை இல்லை. யோ 1:12ஐ வாசித்தால், அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவன் தான் கிறிஸ்தவன் என்று அறிகிறோம். என்ன விசுவாசம்? நாமத்தின் மேல் விசுவாசம்! நாமம் என்றால் இயேசு என்று மட்டுமல்ல, அவரின் மகிமை, மாட்சிமை, மகத்துவம், வல்லமை, அதிகாரம், அன்பு போன்றவற்றைக் குறிக்கிறது. இவைகளை விசுவாசித்து ஏற்றுக் கொள் பவனே தேவனுடைய பிள்ளை. ஆமென். அல்லேலூயா! கோலியாத்துக்கு முன்னால் தாவீது சொன்னது:- சேனைகளின் தேவனா கிய கர்த்தரின் வல்லமையோடு, அதிகாரத் தோடு, மகிமையோடு வந்திருக்கிறேன் என்று பொருளாகும். அப்படியே, என் நாமம் தரித்த ஜனங் கள் என்றால், இஸ் ரேலர் எல்லாரும் தேவனின் மகிமை மாட்சிமை, அன்பு, மகத்துவம், வல் லமை, அதிகாரம் போன்ற வற்றைத் தரித்திருப்பவர்கள் என்று பொருள். பிதாவின் நாமத்தினால் வந்திருக்கிறேன் என்றால், பிதாவின் வல்லமையோடு அன்போடு, அதிகாரத்தோடு, மகிமையோடு இயேசு வந்திருக்கிறார் என்று பொருள். கள்ள தீர்க்க தரிசிகளும், இயேசுவின் வல்லமை யை, அதிகாரத்தை தரித்துக் கொண்டு அநேக அற்புத அடையாளங்கள் செய்து, தீர்க்க தரிசனமும் சொல்வார்கள் (மத் 7:21,22).
                        வெளி14:1ல் வரும் 1,44,000 பேரின் நெற்றிகளில், அதாவது அவர்களின் சிந்தனைகளில் உணர்வுகளில், ம்ண்ய்க்-ல் பிதாவின் மகிமை, வல்லமை, அதிகாரம் எல்லாம் ஊடுருவிக்கிடக்கின்றது என்பதுதான், நாமம் தரித்தல் என்பதாகும்.
                        ""என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்'' (மாற் 16:17) என்றால், இயேசுவின் நாமத்திலே இருக்கும் அதிகாரம், வல்லமையினாலே பிசாசுகளை துரத்து வார்கள் என்று பொருள். ஆக, கிறிஸ்தவன் என்றாலே, தேவனின் காரணப்பெயர்களை மாத்திரம் தரித்துக்கொள்பவன் அல்ல; அந்த பெயர்களுக்குள்ளே - நாமத்திற்குள்ளே - இருக்கிற மகிமையை, மாட்சிமையை, வல்லமையை அதிகாரத்தை தரித்துக் கொண்டு செயல்படுபவனே கிறிஸ்தவன். இவைகளை நாம் தரித்துக் கொள்ளும்போது, உபா28:10ல் சொன்னபடி உலகம் நம்மை ஆச்சரியமாய்ப் பார்க்கும், யோ14:12ல் இயேசு சொன்னபடி அவரிலும் மேலான காரியங்களை செய்ய முடியும். அதனால் தான், உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவருடைய அதிகாரத்தை யெல்லாம் விசுவாசிக்கிறவர்களுக்கு கொடுத்துவிட்டுப்போனார் (மத்28:19) தம்முடைய சமாதானத்தை வைத்துவிட்டுப் போனார்; அன்பை நம்மேல் ஊற்றியிருக் கிறார் (ரோ5:5) வல்லமையை பெற்றுக் கொள்ள வழியையும் காட்டியிருக்கிறார் (மத்17:21) அவருடைய இப்படியான நாமம் தரித்தவர்களாயிருக்க வேண்டும் என்று தான் நம்மை மகிமையி னாலும் கனத்தினாலும் முடிசூட்டி (Praise & Honour, Glory) அவரு டைய கரத்தின் கிரியை களின் மேல் அதிகாரி யாக வைத்து, சகலத் தையும் நமக்கு கீழ்ப்படுத்தினார் (எபி 2:7) அல்லேலூயா!
                        இதை வாசிக்கும் தேவபிள்ளையே! இப்படியாய் தேவ நாமத்தை தரித்துக் கொள்ள வழி என்ன? பவுல் சொல்வது போல, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், அவருடைய உயிர்த்தெழு தலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், எப்படியாயினும் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும் படிக்கும் வசனத்தின் மூலமாய் தினந்தோறும் தேற வேண்டும். எதுவரையில் தேறியிருக் கிறோமோ அது முதல் ஒரே ஒழுங்காய் நடந்து, ஒரே தேவசிந்தையாய் இருக்க வேண்டும் (பிலி 2:10,16) இப்படியிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவ நாமம் தரிக்கப்பட்டவன் என்று பொருள். அவன் பிசாசை, உலகை, பாவத்தை மாமிசத்தை ஜெயித்து வெற்றி நடைபோடுவான் அவனைக் கண்டு பிசாசு ஓடியே போகும்! கிறிஸ்துவுக்கு சாட்சியாயிருப்பான்! ஆமென்!


வியாதி வரக் காரணமென்ன?

                        இந்தக் கேள்விக்கு ஏராளமான விளக்கங்களை பழைய முழக்கங்களிலும், ""வியாதியா? மரணமா?'' என்ற ஆசிரியரின் ஆராய்ச்சிப் புத்தகத்திலும் தாராளமாய் எழுதியிருக்கிறேன். வியாதி வரக் காரணங் களாவன : (1) பாவம் (2) சாபம் (3) பிசாசு, இதுதான் வேதம் தரும் விளக்கம். ஆனாலும், இன்றைக்கு தேதிவரை இன்னும் பல ஆவிக் குரிய சபையார் சத்தியத்தை உணராமல், மனக்கண்கள் பிரகாசமாகாமல் (எபே 1:19) கீழ்க்கண்ட காரியங்களை கோயபல்ஸ்போல சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறதை பகுத்தறிவோடு சிந்தியாமல் (யூதா22) வசனத்தோடு தியானிக்காமல் (சங் 1) அப்படியே நம்பும் விசுவாசிகள் என்ற பெயரால் இருக்கும் கூட்டம் நம்பிக் கொண்டே இருக்கின்றது. இதனால் கர்த்தரை இன்னாரென்று உணராமல், அவரது சித்தமறியாமல் செயல் படுகின்றார்கள். 1யோ3:8ன்படி பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே வந்த மனுஷகுமாரன், வியாதியை சிலுவையிலே சுமந்து தீர்த்தார். (மத்8:17) என்று எழுதப் பட்டுள்ளதால், வியாதி பிசாசின் கிரியை என்று தெள்ளத் தெளிவாக அறிகிறோம். இந்த பிசாசின் கிரியையை தேவனுடைய கிரியை என்று சமப்படுத்துவது அறிவீனமும், மன்னிக்கமுடியாத துர்ச்செயலும் அல்லவா!
                        அவர்கள் சொல்கிறார்கள்: (1) இயற் கையினால் வியாதிவருகிறது (2) கர்த்தர் நம்மை நேசிக்கிறதினால் வியாதி வருகி றது. (3) தேவனுடைய மகிமைக்கேதுவாக வியாதி வருகிறது. (4) மரணத்துக்கே துவாக தேவன் வியாதியை பயன்படுத்து வதால் வருகிறது. இவைகளை வேத வசனப்படி ஒவ் வொன்றாய்ப் பார்ப்போம்.
                        ஜலதோஷம், காய்ச்சல் என்று டாக்டரிடம் போனால், ""மழையில் நனைந்திருக்க வேண்டும், அல்லது அதிக உஷ்ணத்தால் வந்திருக்க வேண்டும் அல்லது தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரமில்லா சூழலால் வந்திக்க வேண்டும்'' என்றெல்லாம் அவர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இஃதெல் லாம் உண்மைதான். ஏசா49:10, சங்55:8 போன்ற வசனங்கள் இதை உறுதிப் படுத்து கின்றன. ஆனாலும் சங்91:5-8ஐ வாசித்தால் இப்படி இயற்கையால் வரும் வியாதிகள் நம்மை அணுகாதாமே! பின்னை ஏன் அணுகுகின்றது? தேவன் இவைகளிலிருந்து தப்புவிப்பாராமே! பின்னை ஏன் வியாதியில் விசுவாசி உழல்கிறான்? சங் 91-ஐ முழுவது மாய் வாசித்தால், ""சர்வ வல்லவ ருடைய நிழலில் தங்க வேண்டும், தேவனே அடைக் கலம், கோட்டை, தேவனே நம்பிக்கை என்று விசுவாசித்து அறிக்கையிட வேண்டும், அவருடைய வசனமாகிய செட்டைகளின் கீழே அடைக்கலம் புக வேண்டும். தேவனின் சத்திய வசனமே நமக்கு பரிசையும் கேடகமும் என்று விசுவாசித்து அறிக்கையிட்டு கிரியை களிலே காட்ட வேண்டும்'' என்று எழுதி யிருக்கிறது. இதன்படி நடக்காத பட்சத்தில் இயற்கையினால் வரும் வியாதிகள் நம்மைத் தாக்க வாய்ப்பு உண்டு. ஆக, வசனப்படி நடக்காத பாவத்தைச் செய்வதால் தான் வியாதி வருகிறதே ஒழிய, வெறுமனே இயற்கையினால் வரும் வியாதி விசுவாசி யைத் தொடவே தொடாது. இப்படியாய் ஆசீர்வாதத்திற்கான வார்த்தைகளை விசுவாசிக்காமல், பாவம் செய்ய வைப்பது ஏதேன் தோட்டத்தில் வந்த பிசாசின் செயல் என்பது அதிக நிச்சயமல்லவா! தேவன் ஞானத்தை கொடுத்திருப்பதால் (நீதி 1:7) வேத வசனத்தால் பிறந்த ஞானத்தோடு இயற்கையின் ஊடே நடமாடுங்கள். பாவமும், சாபமும், சாத்தானும் உங்களை மேற் கொள்ளாது; வியாதியும் வராது (சங் 91:10)
                        எபி 12:5-11ஐ சொல்லி, கர்த்தர் நம்மை நேசிக்கிறதால், அவர் வியாதியால் சிட்சிக் கிறார் என்று போதிக்கிறார்கள். அப்படியா னால் தேவன் நம்மை நேசிக்காத படிக்கு, நாம் அவரை மறுதலித்து விலகி, பிசாசின் பிள்ளையாகிவிட்டால் வியாதி வராதா? சிந்தி யுங்கள். இவர்கள் போதனைப்படி, வியாதி என்பது தேவன் தரும் சிட்சை. வேதத்தின்படி தேவன் தரும் சிட்சை வேசிப் பிள்ளைகளுக்கு அதாவது, இரட்சிக்கப் படாதவர்களுக்கு  இல்லை என்று எபி12:8 சொல்வதைப் பாருங்கள். அப்படியானால் இரட்சிக்கப்படாத வர்களுக்கு வியாதி இல்லையா? வராதா? சிந்தியுங்கள். சரீரத்தகப்பன் சரீரத்தில் சிட்சிப்பார், ஆவியின் தகப்பனாம் நம் ஆண்டவர் ஆவியில் சிட்சிப்பார் (எபி12:9) ஆவியிலே சிட்சை என்பது, மாம்சத்தில் வரும் வியாதியல்ல. எனவே, தேவன் நம்மை நேசிப்பதால் வியாதி நமக்கு வருவதில்லை என்பதை முதலில் அறிய வேண்டும்.
                        மேலும் யோ9:1-3;11:3-45 போன்ற வசனங்களை வைத்துக்கொண்டு தேவனு டைய மகிமைக்கேதுவாக, வியாதி வருகின்றது என்றும் போதிக்கிறார்கள். நன்கு சிந்தியுங் கள். எது தேவனுக்கு மகிமை? வியாதிப் படுவதா அல்லது வியாதியிலிருந்து விடுதலை யாவதா? வியாதியிலிருந்து விடுதலையாக்கத் தானே சிலுவையிலே காயங்களை ஏற்று மரித்தார்! அப்படியிருக்க, அதற்கு மாறாய் வியாதிப்படுவது எப்படி அவருக்கு மகிமை யாகும்? பிறவிக்குருடனைப்பற்றி இயேசு சொல்லும்போது, ""எந்தப் பாவத்தாலும் இவன் இப்படிப் பிறக்கவில்லை ; தேவனுடைய கிரியைகள் மகிமை - வெளிப்படப்போகிறது'' என்றார் (யோ9:3) மகிமை எப்போது வெளிப்படும்? குருடனாய் இருக்கும் போதா? இல்லையே! பிறவிக் குருடன் விடுதலை யாகும் போதுதானே! ""இப்படிப் பிறந்தான்'' என்கிறார் இயேசு. யாரால் இப்படிப் பிறந்தான்? பெற்றோரின் பாவத்தாலல் லவாம்! அப்படியானால் யாரால்? பிசாசின் கிரியையால். பிசாசின் கிரியையால், குருடனாய் பிறந்தவனிடம் தேவனுடைய கிரியை வெளிப்படப்போகிறது என்று இயேசு சொல்கிறாரே ஒழிய, குருடனாய் பிறந்ததே தேவனுடைய மகிமைக்கேதுவாய் என்று அல்ல ; தேவனுடைய மகிமை தீமைக்கேது வானதல்ல; நன்மைக்கேதுவானது. பிசாசின் செயலை தேவனோடு ஒப்பிடலாமா? சிந்தியுங்கள், லாசருவின் வியாதி விஷயமும் இப்படித்தான். எப்போது தேவ மகிமை வெளிப்பட்டது? லாசருவின் சகோதரிகள் விசுவாசித்து கிரியையிலே காட்டும்போது (யோ11:40) லாசரு உயிரடைந்தான். தேவநாமம் மகிமைப்பட்டது; வியாதிப்பட்ட போது அல்ல. அல்லேலூயா! ஒவ்வொரு வரிடத்திலும் தேவ மகிமை வெளிப்பட வேண்டி அவர்களுக்கு வியாதி வர தேவன் அனுமதிக் கிறார் என்றால், நம் தேவன் பிசாசின் கிரியைக்கு துணை நிற்கிறார் என்று பொருள், பிசாசின் கிரியைகளை அழிக்கவந்தார் என்ற வசனம் பொய்யாகிவிடும்.
                        எலிசா வியாதிப்பட்டு மரித்ததை வைத்து (2 ராஜா 13) மரணத்திற்கேதுவாய் இந்த வியாதி அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றும், நித்தியவாழ்விற்குள் வழி நடத்த வியாதியை ஒரு வழியாக தேவன் பயன்படுத்துகிறார் என்றும் போதிக்கிறார்கள். மரணத்திற்கு அதிபதி பிசாசு (எபி 2:14; யோ 10:10) என்பதை அறியாதிருக்கிறார்கள். இந்த அதிபதி, வியாதி யாலும், விபத்துகளாலும், பாவத்தாலும், சாபத்தாலும் மரணத்தை கொண்டு வருவதை வாடிக்கையாக்கி இருக்கிறான். தேவனோ, கர்த்தருடைய பரிசுத்தவான்களுடைய மரணம் அவர் பார்வைக்கு அருமை என்கிறார் (சங் 116:15) துள்ளத்துடிக்க, வியாதி Accident போன்றவற்றால் மரிப்பது தேவனுடைய பார்வைக்கு அருமை யாயிருக் குமோ? அகால மரணமா தேவசித்தம்? சங் 91:16 தானே தேவசித்தம். சங் 91:10ல் வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வார்த்தை பொய்யானால் தான், வியாதி மூலமாய் மரணத்தை தேவன் கொடுப்பார். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவர் வார்த்தை ஒழியாதே! அது ஜீவனுள்ளவார்த்தை அல்லவா! பிசாசின் கிரியையாகிய வியாதி யாலோ, பாவம் சாபத்தால் வரும் வியாதி யாலோ மரணம் நேரிடுவது தேவனுக்கு உகந்தது என்றால், வியாதியை தேவன் ஒழித்தார் என்பதுதான் பொய்; பிசாசுக்கு ஆதரவாயிருக்கிறார் என்பது தான் மெய்!
                        இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! வியாதி பிசாசின் கிரியை, அது தேவனுக்கு எதிரானது; வியாதிக்கு அணுசரணையாய் நம்தேவன் செயல்படமாட்டார், அவர் சிலுவையிலே வியாதியைச் சுமந்து தீர்த்தார். இவைகளை விசுவாசித்து, வேத வாக்கியங் களை தியானித்து, தேவசித்தத்தை குணாதி சயத்தை அறிந்து கொள்! வார்த்தைகளை வைத்து செய்யப்படும் மாயாஜாலங்களை கண்டு கொள்! பாவம், சாபம், பிசாசால் தான் வியாதிவருகிறது என்பதை உணர்ந்து அவைகளுக்கு எதிர்த்து நின்று ஜெயங் கொள்! இயேசுசீக்கிரம் வருகிறார்!

இரகசிய வருகையில் யாருக்கும் சத்தமே கேட்காதா?
                        1தெச4:16-18; 1கொரி15:51-54 தான் சபையாரை எடுத்துக்கொள்ள இயேசு மத்திய ஆகாயத்தில் வந்து நிற்கும் இரகசிய வருகை என்று பழைய முழக்கங்களிலும், ""தெரிந்து கொள்ளுங்கள்'' என்ற ஆராய்ச்சிப் புத்தகத் திலும் எழுதியிருக்கிறேன். இது இரண்டாம் வருகை அல்ல என்றும், எபி 9:28ன் படி முதலாம் வருகையிலே பூமிக்கு எப்படி வந்தாரோ அப்படியே பூமிக்கு ஒலிவ மலையில் கால் வைத்து பரிசுத்த வான்களாகிய நம்மோடு (சகரி 14:4; யூதா15) வருவதுதான் பகிரங்க 2ம் வருகை என்றும் வசனத்தோடு விளக்கியிருக்கிறேன். இன்னும் சிலருக்கு இரகசிய வருகையிலே சந்தேகம். 1 தெச 4:16ல் சொல்லுகிற தேவனுடைய ஆரவாரமும், பிரதான தூதனுடைய சத்தமும், தேவ எக்காளமும் பூமியி லுள்ள, இரகசிய வருகையில் சேராத மற்றவர்களுக்கு கேட்காதா என்பதே கேள்வி. இதை மறுபடியும் விளக்க ஆவியானவர் துணை புரிவாராக!
1. தேவனின் சத்தம்
2.பிரதான தூதனின் சத்தம்
3.தேவ எக்காளம் 
                        1) தேவனின் சத்தம் :- வெளிப் படுத்தின விசேஷம் முழுவதும் காதுள்ள வன் கேட்கக் கடவன் என்றே வசனங்கள் உள்ளனவே காரணம் என்ன? காது எல்லோருக்கும் தானே உள்ளது. ஆனாலும் விசுவாசக்காதுள்ளவன் மட்டுமே கேட்பான். அப்படித்தான் அவிசுவாசக் காதுள்ள வன் இந்த சத்தங்களை கேட்க மாட்டான். ""கெம்பீர சத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள் ளவர்கள்'' (சங் 89:15) என்ற வசனத்தின் படி தேவனின் ஆராவார சத்தத்தை பாக்கியமுள்ள ஜனங்களே அறிய முடியும். தேவனின் சத்தம், மரித்தவர்களும் கேட்கும் விநோதமான சத்தம் என்று யோவா 5:28-29 சொல்கிறது. இதை உறுதிப்படுத்தும்படியே இயேசு,மரித்த லாசருவின் கல்லறையின் முன் சத்தமிட்டு ""லாசருவே வெளியே வா'' என்றார் (யோவா11:43) கல்லறை யில் மரித்திருந்த எல்லோருமே எழும்பாமல் லாசரு மட்டுமே எழும்பி வந்தான் என்றால் அந்த சத்தத்தின் மகிமைதான் என்னே! பிதாவாகிய தேவன், மாம்சத்திலிருந்த இயேசுவோடு பேசின வார்த்தைகளை அருகிலிருந்த மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று யோவான் 12:28,29 சொல்கிறது. அப் 9:7,22:9,26:14 வசனங்களின்படி ""சவுலே, சவுலே'' என்று தேவன் பேசியதை அருகிலிருந்தோர் அறியவில்லை. 1சாமு3:7-8ன் படி, ""சாமுவேலே; சாமுவேலே'' என்ற தேவனின் சத்தத்தை அருகிலிருந்த ஆசாரியன் ஏலி கூட அறிய வில்லை. தேவனின் ஆரவார சத்தத்தை நாம் கேட்க ஆயத்தமாவோம்; அல்லேலூயா!
                        (2) பிரதான தூதனின் சத்தம்:- தேவனோடு தேவ தூதர்கள் போர் வீரர்களைப் போல் வருகின்றனர்; நாமெல்லாம் மறுரூபமாகி வானமண்டலம் தாண்டி தேவனோடு சேர ஆயத்த மாகுகின்ற நேரம். வானமண்டலத்திலுள்ள பிசாசின் பொல்லாத சேனைகள் (எபே6:12) நம் வழிக்குத் தடை பண்ணுகின்றன. அப்போதுதான் பிரதான தூதன் பிசாசோடு சண்டையிட்டு நமக்கு வழியை ஆயத்தப் படுத்துகின்றான். போர்க் களத்தில் இருந்த போர் வீரர்களுக்கு தெரியும் இந்த சத்தம் எவ்வளவு பலமாயிருக்குமென்று. தானியேலின் ஜெபத்திற்கு பதில்வரும் வழியிலும் (தானி10:12-14) மோசேயின் சரீரம் சம்பந்தப்பட்ட வழக்கிலும் (யூதா9) பிரதான தூதன் போரிட்டான் என்று அறிகிறோம். இந்த சண்டையும் சத்தமும் வான மண்டலத்திலே அதுவும் ஆவிகளுக் குள்ளே! அது பூமியிலுள்ள வர்களுக்கு கேட்க வாய்ப்பில்லை.
                        (3)  தேவ எக்காளம்:- இஸ்ரவேலரை அழைக்க எக்காளம் தான் ஊதப்படும். (எண்10:2) நெகேமியா தேவாலயம் கட்டும்போதும் எக்காள சத்தம்தான் ஊதுவான். இஸ்ரவேலர் மட்டும் கூடுவார் கள். பள்ளிகளில் கூட Roll Call  க்கு விசில் அடிக்கும்போது, கேட்ட மாணவர் மட்டுமே ஓடி வருவார்கள். அதுபோல நாம் எதிர்கொண்டு போக, எக்காளம் ஊதப்படுகின்றது. இது உலகப் பிரகாரமான எக்காளம் அல்ல. தேவ எக்காளம். தேவ எக்காளத்தை தேவ பிள்ளைகள், ஆவிக் குரிய மணவாட்டிகள் மட்டுமே கேட்பர், அல்லே லூயா! தேவ எக்காளம் எப்படி இருக்குமென்று ஒருவரும் அறிந்ததில்லை. எல்லோர் வீட்டிலும் ரேடியோ இருந்தாலும், அந்த ரேடியோ ஸ்டேஷனுக்கு ஏற்றபடி டியூன் பண்ணிய ரேடியோ மட்டுமே அந்த நிகழ்ச்சியை எடுக்கும். மற்றவை எடுக்காது. அதுபோல் வருகைக்காய் காத்தி ருக்கும் மணவாட்டிக்குத்தான். அது கேட்கும். தாவரங்கள் கூட பசிக்கிறது என்று கதறுகிறதாம். விஞ்ஞானி கண்டுபிடித்து இருக் கிறார். அதன் குரலை கேட்கும் கருவிமூலம் பதிவு செய்து, தண்ணீரை வார்க்கிறார். தாவரத்தின் குரல் நமக்கு கேட்பதில்லையே!
                        இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே! இந்த மூன்று சத்தங்களும் உலகத்தாருக்கு கேட்காது, அது இரகசிய வருகையிலே மறுரூபமாகப் போகும் நம் சபையாருக்கு மாத்திரம் கேட்கும். அல்லேலூயா!

பண்டிகைகளை கொண்டாட கொலோ 2:16 பச்சை கொடி காட்டுகிறதா?

                        லேவி 23ல் ஓய்வு நாள் பண்டிகை, பஸ்கா பண்டிகை, புளிப்பில்லா அப்பப் பண்டிகை, அறுப்பின் பண்டிகை, பெந்த கொஸ்தே பண்டிகை, எக்காளப்பண்டிகை, பாவநிவாரண நாள் பண்டிகை, கூடாரப் பண்டிகை என்று 8 பண்டிகைகள் உள்ளன. இவைகளைத்தான் இஸ்ரேலர்கள் கொண் டாட வேண்டுமென்று தேவன் மோசேயின் மூலம் கட்டளை கொடுத்தார். இந்த எட்டுப் பண்டிகைகள் அல்லாமல், வேறெந்தப் பண்டிகைகளும் வேதத்தில் ஆசரிக்க தேவனால் சொல்லப்படவில்லை. எந்த தேவ மனுஷர்களும் ஆசரிக்கவும் இல்லை. ஆனால் இந்த கடைசி காலத்தில், நவீனப் பண்டிகைகள் பல உருவாகி இருக்கின்றன. Good Friday, ஈஸ்டர், கிறிஸ்மஸ் போன்ற இடையிலே நுழைந்த - ஆதி அப்போஸ்தல காலத்தில் இல்லாத - வேதத்தில் சொல்லப் படாத கத்தோலிக்க சபையினரால் உருவாக் கப்பட்ட பண்டிகைகள் இன்றைக்கு ஆவிக் குரிய சபைகளிலும் தலைதூக்கி நிற்கின்றன. அவைகளை ஆசரிக்கவேண்டும் என்று சப்பை கட்டு கட்டுகிற ஊழியக்காரர்களும் ஏராளம். இந்த நிலையில், வேதம் சொல்லும் பண்டிகைகள் பற்றி ஆவியானவர் சொல்வதைக் கேட்போம்.
                        நமக்கு எதிரிடையாகவும், கட்டளை களால் நமக்கு விரோதமாகவும் இருந்த (உபா31:26 ) கையெழுத்தை இயேசு குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து சிலுவையில் ஆணியடித்தார். (கொலோ2:14). ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப் பிறப்பையும், ஓய்வு நாட்களையும் குறித்தா வது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தா திருப்பானாக, அவைகள் வருங்காரியங் களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது (கொலோ 2:16,17) இந்த வசனத்தை எடுத்துக்கொண்டு, ""பண்டிகைகள் கொண்டாடுவதைக்குறித்து யாரும் குற்றப்படுத்தக்கூடாது என்று போதித்து பண்டிகைகளைக் கொண்டாடலாம்'' என்று கொண்டாட ஆரம்பிக்கின்றனர் இவர்கள் கொலோ 2:17ஐ வாசிப்பதே இல்லைபோலும், இந்தப் பண்டிகைகள் எல்லாம் வருங் காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது என்றும், அவைகளின் பொருள் நிஜமாகிய கிறிஸ்து வைப் பற்றினது என்றும் தியானிப்பாரில்லை. நிஜமாகிய கிறிஸ்து வந்த பிறகு நிழலாகிய பண்டிகைகள் தேவையில் லை என்பதுதான் இதன்பொருள். இந்த வசன வெளிப்பாடோடு, அந்த நியாயப்பிரமாணப் பண்டிகைகளை கொண்டாடமல் இருக்கும் கிறிஸ்தவ விசுவாசியை, ஒருவனும் குற்றப்படுத்தக் கூடாது. தேவன் மோசேயிடம் சொல்லிய இந்தப்பண்டிகையை ஆசரிக்கவில்லை என்று ஒருவனும் குற்றப்படுத்தாதிருப்பானாக என்று வசனம் கூறுகின்றது. ஆசரிக்காதவன் குற்றவாளி, பாவி என்றெல்லாம் தூஷிக்கக் கூடாது. விருத்தசேதனம் பண்ணாதது பாவமென்று சொல்லி அதை எப்படி புறஜாதிக்கிறிஸ்தவர்களிடம், யூதசபையில் இருந்து கிறிஸ்தவ சபைக்கு வந்தவர்கள் கட்டாயப் படுத்தினார்களோ, அப்படி கட்டாயப் படுத்தி - குற்றப்படுத்தி - அந்தப் பண்டிகை களை ஆசரிக்க சொல்லக்கூடாது என்று தான் பவுல் எழுதுகிறான்.
                        வேதத்தில் சொல்லப்பட்ட லேவி 23ல் உள்ள 8 பண்டிகைகளை ஆசரிப்பதே தேவையில்லை, அது நிழல் - இயேசுவாகிய நிஜம் வந்தாயிற்று என்று சொல்லும்போது, ரோமன் கத்தோலிக்கரால் நுழைக்கப்பட்ட பண்டிகைகளை கொண்டாடுவது எப்படி நியாயம்? அதுவும் அந்நிய தெய்வப் பண்டிகை நாளிலே, அந்நிய தெய்வப் பேராலேயே கொண்டாடுவது தவறல்லவா! இஸ்தார் தேவதையின் பண்டிகையைத் தான் ஈஸ்டர் பண்டிகையாக மாற்றி இயேசுவின் உயிர்த்தெழுதல் என்று சாயம் பூசி கொண்டாடப்படுகிறது. அதிலே இயேசு உயிர்த்தெழுந்த கிழமை மட்டும் ஞாயிறு என்று வைத்துக் கொண்டு, மாதம் தேதியை மாத்திரம் வருடாவருடம் மாற்றி, இஸ்தார் தேவதையின் பண்டிகையை ஒட்டியே கொண்டாடுகின்றனர். சூரிய தேவதையின் பண்டிகை டிசம்பர் மாதம் ஆரம்பித்து 25ம் தேதி உச்சகட்டம் எகிப்தில் அடையும். புற ஜாதியிலிருந்து கிறிஸ்துவுக்குள் வந்தவர் களை மகிழ்விக்க, அந்த அந்நிய தெய்வப் பண்டிகையின் மாதத்தில் தேதியில் ""இயேசு பிறந்தார்'' என்று சாயம் பூசி கொண்டாடப் படுகிறது. இதெல்லாம் பிசாசின் தந்திரங்கள். கர்த்தாதி கர்த்தராம் நம் ஆண்டவரை அந்நிய தெய்வத்திற்கு சமமாக்கி, நம் தெய்வத்தின் மகிமையை கெடுக்கிறான் பிசாசு, அதையும் ஆவிக்குரிய ஊழியர்களையும், விசுவாசி களையும் அறியாமலே தவறாய் அறிய வைத்து செயல்படப் பண்ணுகிறான்.
                        அப்படியானால் கிறிஸ்தவனுக்குப் பண்டிகையே இல்லையா என்பது ஒரு கேள்வி.""மற்ற புறஜாதிப்பிள்ளைகள் தீபாவளி, பொங்கல் என்று கொண்டாடும் போது நம்பிள்ளைகள் பண்டிகையே இல்லா மல் ஏமாந்த சோனகிரியாய் இருக்கவே கூடாது'' என்று ஆணித்தரமாய் சொல்லி நம் பிள்ளைகளுக்கும் அன்றைய தினம் பட்டாசுகள் வாங்கிக் கொடுக்கலாம் என்று ஆவிக்குரிய ஊழியக்காரர்கள் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி யாய் கள்ள உபதேசங்கள் பெருகுகிறபோது, வருகையில் பங்குபெறுவோர் எத்தனைபேர் என்று விரல்விட்டு எண்ணும்படிக்கு இருக்கிறது.
                        கிறிஸ்தவனுக்கு வருஷத்துக்கு ஒரு முறை அல்ல, சபை கூடிவரும் போதெல்லாம் பண்டிகைதான். வாரம் ஒருநாள் என்று கணக்கிட்டாலும் கூட மொத்தம் 52 பண்டிகை கள் வருகின்றன. ஆக, கிறிஸ்தவனுக்கு வாரா வாரம் பண்டிகைகள். அல்லேலூயா! இந்தப்பண்டிகையைத்தான் நாம் ஆசரிக்க வேண்டும் என்று 1கொரி5:7,8ல் பவுல் சொல்லுகிறான். இதுதான் திருவிருந்து ஆராதனைப்பண்டிகை. இதை அவரின் நினைவாக எப்போது வேண்டுமானாலும் ஆசரிக்கலாம் (1கொரி11:23-25). ஆசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட பண்டிகை யை விட்டுவிட்டு, ஆசரிக்கத் தேவையில்லை என்று சொல்லப்பட்ட கிறிஸ்துவுக்கு நிழலாட் டமான பண்டிகைகளையும், பக்கவழியாய் சபைக்குள்ளே நுழைந்த ஈஸ்டர், கிறிஸ்மஸ், Good Friday போன்ற பண்டிகைகளையும் கொண்டாடும் பெயர் கிறிஸ்தவ சபை யாரைப்போன்ற ஆவிக்குரிய சபையாரின் மனக்கண் பிரகாச மடையட்டும்! பச்சைக் கொடி அல்ல, சிவப்புக் கொடியைக் காட்டி பண்டிகை கொண்டாட கொலோ2:16 தடை செய்கிறது என்று முதலில் உணரட்டும்! ஆமென்!